Top 5 Rajeshkumar Crime Novels in Tamil

தமிழகத்தில் க்ரைம் கதைகள் என்றால் வாசகர்கள் உச்சரிப்பது “ராஜேஷ்குமார்” என்ற பெயரையே. ராஜேஷ்குமார் ஆயிரக்கணக்கில் கிரைம் கதைகளை எழுதியுள்ளார். பலரது நீண்ட தூரப் பயணம், தனிமை நேரங்கள், சுவாரஸ்ய பொழுதுபோக்கிற்கு தோழனாக இருந்தவை இந்த நாவல்கள்.

இதில் நான் படித்தது சிறிதளவே. ஆனால், அவற்றில் மிகுந்த சுவாரஸ்யத்தையும், வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட விரும்புபவர்களுக்கு ஏற்ற ஐந்து நாவல்கள் பற்றி இங்கே..

அதிரடி ஆட்டம் : –

க்ரைம் கதைகள் பல தளங்களில் அமைத்து எழுதப்படுபவை. அதில் அதிரடி ஆட்டம் சயின்ஸ், ஸ்பேஸ் ஸ்டேஷன் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற விஷயங்களைத் தொடர்புபடுத்தி புனையப்பட்ட ஒரு கிரைம் கதை. 

விவேக்-ராஜேஷ்குமாரின் ஆஸ்தான ஹீரோ. வில்லன்களின் விண்வெளி சதியை முறியடிப்பது போன்ற கதையை திருப்பங்கள் சேர்த்து அமைத்திருப்பது சுவாரஸ்யத்தை இணைக்கும் முயற்சி. அதில் சில பாயிண்டுகள் சுவாரஸ்யத்தை மின்னல்போல் தோற்றுவித்து மறையும். மொத்தத்தில் இது ஒரு விறுவிறுப்பான அதிரடி ஆட்டமாகத்தான் இருக்கும்.

கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு : –

இது ஒரு விதமான சைக்கோ த்ரில்லர் கதை. இதை படிக்கும்போது பத்து பக்கத்திற்கு ஒரு கொலை நிச்சயமாக சம்பவிக்கும். பெரும்பாலும் சைக்கோ கதைகளில் பெண்கள்தான் கடத்தப்படுவார்கள். ஆனால், இந்த கதை வேறு முனைப்புடையது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். சைக்கோ படங்களில் அமைக்கப்படும் திகில் சூழ்நிலைகளைப் போல திகில் பீடிக்கும் அனுபவத்தை வாசிப்பிலேயே வரவழைக்கும் ஜாலம் ராஜேஷ்குமாரால் நிகழ்த்தப்பட்டு இருக்கும். மொத்தத்தில் இது மற்ற சைக்கோ கதை மேகங்களுடன் சேராமல் தனித்து நிற்கும் நிலவு.

காற்று உறங்கும் நேரம் : –

எப்போதும் ராஜேஷ்குமாரின் டைட்டில்கள் நம்மை ஏதோ செய்துவிடும். இதில் அவர் தொட்டிருக்கும் மற்றொரு எல்லை அமானுஷ்யம்(Horror).

இதில் சில வழக்கமான திட்டங்களையும், நகர்வையும் கையாண்டிருப்பது போன்று நம்மை ஏமாற்றி கதையின் ஆழத்திற்கு இழுத்து சென்று விடுவார் ராஜேஷ்குமார். எப்போதும் போல நள்ளிரவில் தனித்த பங்களாவில் வினோத செயல்பாடுகளுடன் ஆரம்பமாகும் கதை, மர்ம கொலைகளையும் அதற்கான அமானுஷ்ய முன் கதைகளையும் பின்பற்றி செல்லும். எப்பொழுதும் அசாதாரண கதைகளை முடிக்க அசாதாரண ஹீரோ தேவையல்லவா? மர்மங்களை அவிழ்க்க, பேய் பங்களாவில் தனியாகத் தங்கும் விவேக் வாசகர்களின் உச்சபட்ச சுவாரஸ்யத்தை ஈர்த்து வைத்துக் கொள்கிறான். இறுதியில் ஜெயிப்பது அமானுஷ்யமா? விவேக்கின் அறிவா? படித்துப் பாருங்கள்.

திக் திக் திலகா : –

இது ஒரு பக்காவான சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் கதை. பெண்களை பலவீனமாக எண்ணும் மனிதர்களின் மெண்ட்டாலிட்டியையும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்( பெண்கள்) என்று அழுத்தமாக சொல்லும் பெண் அத்தியாயங்களையும், பக்கங்கள் கழிவது தெரியாத விறுவிறுப்பையும் ஒருசேர கதையைப் புனைந்திருக்கிறார் ராஜேஷ்குமார்.

வாசிப்பு சோர்வே கொடுக்காது இந்த கதை. இறுதியில் கதை மிகப்பெரிய கேள்விக்குறியுடன் முடிந்திருப்பது ஏகாந்த சிந்தனைகளுக்கு நம்மை இழுத்துச்செல்லும். வாசித்து முடித்த பிறகும் பல நிமிடங்கள் யோசிக்க வைக்கும் திக் திக் திலகா. யோசிக்காமல் படியுங்கள்.

உலராத ரத்தம் : –

மீண்டுமொரு டைட்டிலுக்கான applaus. இதுவும் ஒரு வித்தியாசமான களம் தான் (Black Magic) மாந்திரீகம். இது கிரைம் நாவல் வரிசையில் வெளிவரவில்லை. இது திரில்லர் நாவலாக வெளியானது. இதிலும் நம் நாயகன் விவேக் தான். ஆரம்பம் முதல் இரத்த வாடையும், மாந்திரீகமும், பிணங்களும் ஒருவித சூனிய மயமான திகிலை கொடுக்கும். இருட்டில் ஏற்றும் விளக்காக கதையின் மத்தியில் விவேக் எனும் சுடர் அமானுஷ்யங்களைத் தீண்ட அது கதையில் திருப்பங்கள் ஆக பிரதிபலிக்கிறது. ஒரு சுவாரசியமான புத்தகத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் தேவையை நிறைவு செய்யும் உலராத ரத்தம். துவைக்க துவைக்க போகாத ரத்தக்கறை போல படிக்க படிக்க சுவாரஸ்யம் தந்துகொண்டே இருக்கும். முயற்சித்து பாருங்கள்!

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #top_5_rajeshkumar_crime_novels_in_tamil

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d