தனித்திரு.! விழித்திரு..! – Crime Novel

பிரதாப்பை விரும்பும் அட்சதா தன்னுடைய முதலாளியின் பையன் சரணை ஏற்க மறுத்து விருப்பத்தைச் சொல்ல நாட்களைக் கடத்துகிறாள். இந்நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த அட்சதாவின் அண்ணன் சபாபதிக்கு வேலை கிடைக்கிறது. ஒரு வாரம் ட்ரெய்னிங்கிற்காக அவன் மும்பை செல்ல வேண்டியிருந்தது.

சிட்டியிலிருந்து ஒதுக்குப்புறமாக குடியிருக்கும் சபாபதியும் அட்சதாவும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். தங்கையைத் தனியே விட்டுச் செல்ல தயங்கிய சபாபதி, பால்ய நண்பன் லீலாகிருஷ்ணன்-வாசுகி வீட்டில் அவளை விட்டுச் செல்கிறான்.

ஏற்கனவே பிசினஸில் ஏகப்பட்ட நட்டம் ஏற்பட்டு கஷ்டத்தில் இருந்த லீலாகிருஷ்ணனுக்காக காலேஜில் உடன் படித்த சுரேஷிடம் 5 லட்ச ரூபாய் பணம் கடனாகக் கொடுத்து உதவுமாறு கேட்கிறாள் வாசுகி. தன்னுடைய அப்பாவிடம் பெர்மிஷன் கேட்டு விட்டு உதவி செய்வதாக விஷமத்துடன் சுரேஷ் கூறுகிறான்.

ஒருநாள் விடியற்காலையில் வாசுகியின் வீட்டிற்கு வருகிறான் சுரேஷ். அங்கே அட்சதாவைப் பார்த்த அவன் மனதில் உடனே அந்த எண்ணம் தோன்றி மறைகிறது. அட்சதாவைப் பற்றி வாசுகியிடம் விசாரித்துத் தெரிந்துகொண்ட அவன், அவனுடைய அப்பா பணம் தர சம்மதித்தைக் கூறவும் மிகவும் சந்தோசப்படுகிறாள் வாசுகி.

இந்த இடத்தில் சுரேஷ் வாசுகிக்கு செக் வைக்கிறான். அப்பாவை நேரில் சந்தித்து அவர் கேட்கும் விசயத்திற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பணத்தைத் தருவதாக அவன் பொடி வைத்துப் பேச சற்று குழப்பம் அடைகிறாள் வாசுகி.

இதற்கிடையில் சரணிடம் இருந்து தப்பிக்க, உடனே திருமணத் தேதியைக் குறிக்க சொல்லி போனில் நச்சரிக்கிறாள் அட்சதா. பூத்தில் பிரதாப்பிற்கு போன் செய்துவிட்டு வெளியே வந்த அவளை தூரத்தில் இருந்து ஒருவன் நோட்டமிட பஸ் வந்த வேகத்தில் கிளம்புகிறாள் அட்சதா.

சுரேஷின் வீட்டிற்கு சென்ற போது அவன் அப்பா, அட்சதாவை வைத்து விளம்பரப் படம் எடுக்க வாசுகியிடம் உதவி கேட்கிறார். இரவு எட்டு மணி நேரம் மட்டுமே படம் எடுக்க அட்சதா இருந்தால் போதும் எனவும் அவளுடைய கற்புக்கு எந்தப் பாதிப்பும் வராது எனவும் கூறி வாசுகியை சமாளிக்கிறான் சுரேஷ்.

இதற்கு ஒப்புக்கொண்டால் கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பி தர வேண்டாம் எனவும், இதற்காக மேலும் 5 லட்ச ரூபாய் தருவதாகவும் கூறுகிறார் சுரேஷின் அப்பா. வரப்போகும் பெரிய தொகையை மனதில் கணக்குப் போட்டுப் பார்த்த வாசுகி கணவனிடம் சம்மதம் வாங்கி வருவதாகப் புறப்படுகிறாள். முதலில் பயந்த லீலாகிருஷ்ணன் மனைவியின் சமாதானத்தால் ஒத்துக்கொள்கிறான்.

இதற்கு அட்சதா ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதை அறிந்த லீலா-வாசுகி இருவருக்கும் திட்டம் போட்டு குடுக்கிறான் சுரேஷ். நைட்ரோஜின் மாத்திரையைப் பாலில் கலந்து இரவில் கொடுக்குமாறு கூறிய சுரேஷ், அதற்கு பிறகு அவள் மரக்கட்டை போல மாறிவிடுவாள் எனவும் நாம் பயப்படத் தேவையில்லை எனவும் கூறுகிறான்.

வாசுகி அந்த மாத்திரையைப் பாலில் கலந்து கொடுத்துவிட்டுத் திரும்புகையில் அட்சதா டைரியில் மறைத்து வைத்திருந்த ஒரு கடிதம் அவளுக்குக் கிடைக்கிறது. அதில் அவள் பிரதாப்பைக் காதலிப்பதாகவும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு திரும்ப வந்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க நினைப்பதாகவும் எழுதியிருந்தாள்.

இதை சாதகமாக வைத்துக் கொண்டு அட்சதாவை சுரேஷிற்கு மொத்தமாக விற்கத் திட்டம் போடுகிறாள் வாசுகி. தங்களை நம்பி வந்த பெண்ணை பணத்திற்காக விற்க நினைக்கும் லீலா-வாசுகியிடம் இருந்து அட்சதா தப்பித்தாளா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #thanitthiru_vizhitthiru

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=167

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: