மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்..!?

“அடுத்து படிக்கப்போகும் அந்த சூழ்நிலையில் உங்களை வைத்து உங்களுக்குள் கற்பனை செய்துகொள்ளுங்கள்”

“ஓர் இரவில், தனிமையை உணர்ந்து, சில சிந்தனைகளின் உந்துதலில், உங்கள் காரை எடுத்துக்கொண்டு யாரும் இல்லா தார்ச்சாலைகளில் மெதுவாக நகன்று சென்றுகொண்டிருக்கும் போது…

அப்போது ஒரு சாலையின் ஓரத்தில் இருந்து ஒரு நபர் (ஆண் அல்லது பெண் உங்கள் கற்பனைக்கு..) உங்கள் காரை மறித்து,

தனது மொபைல் ஆஃப் ஆகிவிட்டதாகவும், வெகுநேரம் நடந்து களைத்து விட்டதாகவும், இரவு நேரமாதலால் தன்னை வீட்டில் விடும்படி லிஃப்ட் கேட்கிறார். ஓர் உதவியாக! நீங்களும் அவரை அமரச்செய்து அதே வேகத்தில் மெதுவாக காரை நகர்த்திக்கொண்டிருக்க… அத்துணை நபர் (நீங்கள் லிஃப்ட் கொடுத்த ஆணோ? பெண்ணோ?) உங்களிடம் பேச்சுக்கொடுக்கிறார். அவர் மிகவும் வித்தியாசமான அவ்வப்போது குரூரமான தகவல்களையும் உங்களிடம் பரிமாறிக்கொள்கிறார்.

ரப்பர் டயர்கள் உராய்ந்து நேரம் தேய்ந்து கொண்டே இருந்தது அந்த ராத்திரியில். நன்றாக பேசிக்கொண்டிருந்த அந்த துணை நபர், இன்னும் ஒரு நிமிட நேரத்தில் தன் இடம் வந்துவிடும் என்றும்..தனது வீட்டிற்கு வந்துவிட்டு கிளம்பும்படியும் கேட்கிறார். மர்மப்புன்னகையுடன்…

அத்துணை நபரின் வீட்டை நெருங்க நெருங்க உங்கள் இதயம் படபடக்கிறது. உங்கள் மனம் எதனுடனோ போராடுவதைப்போல் ஒரு உணர்வு. அப்போது அந்த துணை நபர் குரல் சொன்னது “வண்டியை நிறுத்து..”

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

உங்கள் வீட்டில் நீங்கள்…

நெருப்பு தனது வேலையை சரிவர செய்ய, உங்கள் முன் இருந்த பாத்திரத்தில் ‘சூப்’ போன்ற ஏதோ ஒன்று, கொப்பளித்து, பொங்கிவரும் தோரணையில் கொதித்துக்கொண்டிருந்தது.

அச்சலனங்களுக்கிடையில் மாமிச துண்டுகள் மேல் வரும்போதெல்லாம்.. ஒரு எண்ணம்..ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. அடக்கிவைக்க முடியாத தொந்தரவாக இருந்தும் சூப் கொதிப்பதை நிறுத்தாமல் பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் மனதில்…ஒரு குரல்..

“அவரின் (அத்துணை நபரின்) பெயரைக் கேட்க மறந்துபோய்விட்டாயே? முட்டாள்”

என்றது.

இச்சிறு கற்பனைக் கதையின் முடிவையும், கருவையும், உங்களிடமும் உங்களுக்குள் இருப்பவரிடமும் விட்டுவிடுகிறேன்.

நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை ஒன்று உள்ளது. அது நமக்குள் இருக்கும் குரூர மிருகத்தைப் பற்றிய உண்மை. அம்மிருகம் உங்களின் எண்ணத்தின் வழியே உணவினை உண்டு வளர்கிறது அல்லது உங்களால் வளர்க்கப்படுகிறது. அதேபோல் அதனைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவரும் நீங்கள் தான்.

நம்மில் பெரும்பாலானோர் சட்டத்திற்கும், சமூகத்திற்கும் பயந்து அம்மிருக முகம் வெளியே தெரியாதபடி கட்டுப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

“மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்” இப்புத்தகத்தை உங்களுக்கு பரிந்துரை செய்ய காரணம், இப்புத்தகத்தின் வழி உங்களுடைய மிருகத்தின் சாயலை சற்று கவனித்துப் பாருங்கள். அதை எப்படி கட்டுப்படுத்துவது? எப்படி நாம் சொல்வதைக் கேட்க வைப்பது?

போன்றவை பற்றிய அறிவை உங்களுக்குத் தரலாம்.

மனிதர்களின் மிருகத்தனம் தினம்தினம் யாரோ ஒருவர் மூலமாக உலகிற்கு வெளிக்காட்டப்படுகிறது. ஆனாலும் நம்மில் பலர் அம்மிருகத்தை மிகச் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறோம்.

வரலாற்றில் உள்ள அப்படிப்பட்ட சில மிருகங்களின் ரத்தவேட்டை பற்றியும், அவை வெளிப்பட்டதற்கான காரணங்கள் பற்றியும் எழுதப்பட்ட புத்தகம் ஆதலால் இதிலும் சில குரூரங்கள் நாம் நேரில் நின்று பார்ப்பது போல வரையறுக்கப்பட்டிருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறந்த கார்ட்டூனிஸ்டான மதன் அவர்களின் படைப்பாக ஆனந்த விகடனில் வெளிவந்த விறுவிறுப்பான தொடர், பிறகு புத்தகமாக மாற்றப்பட்டது. முக்கியமாக இது serial killer-களைப் பற்றிய புத்தகமோ..dark stories புத்தகமோ.. இல்லை. இது உளவியல் ரீதியான புத்தகம். எண்ணங்களைப் பற்றிய அறியாமையை இனம்கண்டுகொள்ள உதவும். அதேபோல் இப்புத்தகத்தை வித்தியாசமான பயணமாக தொய்வின்றி வாசிக்கலாம். உங்கள் வாசிப்பறையில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்.

*முன்னுரையை கட்டாயம் படிக்கவும்.

#one_minute_one_book #tamil #book #review #psychological #madhan #manithanukkul_oru_mirugam

want to buy : https://www.amazon.in/Manithanakkul-Oru-Mirugam-Madhan/dp/8189780557

One thought on “மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்..!?

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d