#paragavan #taliban_oor_arimugam
அந்த நடுநிசி நேரத்தில்..
தெருவில் இரண்டு பெண்களை பெயர் தெரியாத ஏதோ ஒரு போராட்டக் குழு வன்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இது நடந்தது ஆப்கானிஸ்தானில்.
தன் கண் முன்னே விரிந்த அந்தக் காட்சியைப் பார்த்து, அந்த நிமிடம் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது அந்த இளைஞன் ஓமரால்.
தன்னுடைய நாட்டின் மோசமான நிலையை எண்ணி கலங்கிய ஓமர் அடுத்த நிமிடம் குதிரையில் அதிவேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.
சோவியத் யூனியனும் அமெரிக்காவும் முடிந்தவரை ஆப்கானிஸ்தானை வைத்துப் பந்தாடிச் சென்ற பிறகு..தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனான். ஆம், ஆப்கானில் அப்போது அவ்வளவு போராட்டக் குழுக்கள் இருந்தன.
உண்மையில் அப்போது தான் ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய சம்பவத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. அந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள் அந்தப் போராட்டக் குழுவைச் சேர்ந்த அத்தனை பேரையும் அதே தெருவில் வைத்து அனைத்து மக்களின் முன்னிலையில் வைத்து கொன்று பழி தீர்த்துக்கொண்டார் ஓமர். மக்களின் முன்னால் ஹீரோவானார் அவர்.
அதன் பிறகு ஓமரைப் பற்றி பல கதைகள் ஆப்கான் முழுவதும் பரவிவிட்டாலும், அதையெல்லாம் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இன்னொரு பக்கத்தைப் பார்க்கச் செல்வோம். இப்போது அது தான் நமக்கு முக்கியம்.
சோவியத்-அமெரிக்கா யுத்தத்திற்குப் பிறகு ஆப்கான் மக்களுக்கு நிஜமாகவே ஒரு இடைவெளி தேவைப்பட்டது உண்மை தான். ஆனால், அதற்கு சற்றும் அவகாசம் தராமல் அடுத்தடுத்த சம்பவங்கள் அவர்களை வழிநடத்தின.
குறுக்கே வந்த அனைத்து போராட்டக் குழுக்களையும் சமாளித்து, ஒரு மாணவப் படையை உருவாக்கி, மக்களிடம் தன்னுடைய கருத்தை வலுப்படுத்தி, ஒரு நோக்கத்தை முன்னெடுத்து, ஒத்தை ஆளாக மிகப்பெரிய யுத்தத்தைத் திறம்பட திட்டமிட்டு அதை நடத்தியும் காட்டியவர் முல்லா ஓமர். அந்த அளவுக்கு ஓமருக்கு மக்களிடம் செல்வாக்கு இருந்தது.
ஒரு போராட்டக் குழுவிற்கு வேறொரு நாட்டு உளவுத் துறையே உதவி செய்வதும்..யுத்தத்துக்காக மக்கள் தங்களது ஒருவேளை கஞ்சியைக் கொடுக்க முன்வந்ததும் சாதாரண விஷயங்கள் அல்ல.

இவ்வளவு நேரமாக மாணவர் படை, குழு என்று மட்டுமே பார்த்து வந்தோம் இல்லையா..அந்தக் குழுவிற்குப் பெயர் இல்லையா..? உண்டு..உண்டு..மாணவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்ட அவர்கள் ‘தாலிபன்’(மாணவர்கள்) என்றே அழைக்கப்பட்டனர்.
ஆனால் அனைத்து மக்களின் ஆதரவுடன் யுத்தத்தை வென்று ஆட்சி பீடத்தில் அமர்ந்த தாலிபன்களுக்கு முறைப்படி ஆட்சி செய்யத் தெரியவில்லை. துப்பாக்கியுடன் ஆபிசிற்கு வந்த அரசு அதிகாரிகள், ஒபியம் விளைவித்த அரசாங்கம், பெண்களுக்கு மிகக் கடுமையான சட்டதிட்டங்கள், இனப்படுகொலை, இது அனைத்தையும் தாண்டி நாட்டின் வரவு-செலவுக்கும், மக்களின் ஒவ்வொரு தேவைக்கும் முல்லா ஓமர் சீட்டு எழுதிக் கொடுத்தே பிரச்சனைகளைத் தீர்த்தது என்று இவர்கள் செய்யாத அட்டூழியங்களே இல்லை எனலாம்.
தாலிபன்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு பதிவு பத்தாது. மீதியை பா.ராகவன் எழுதிய புத்தகத்தைப் படித்து தாலிபன்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
Read this also:
#tamil #oneminuteonebook #one_minute_one_book #taliban_book #taliban #tamilbook #tamil
Leave a Reply