சாமி & கோ

20 ஆம் நூற்றாண்டின் கடைசி சில ஆண்டுகள் தொழில்முறையிலும் தொழில்நுட்பத்திலும் அதிசயிக்கும்படி பல மாற்றங்களை அடைந்து வரும் ஆண்டு. இப்பேர்ப்பட்ட மாற்றங்கள் எல்லாம் அந்தச் சிறுவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

“அடேய் சம்முகா! மெய்யாலுந்தாண்டா, நாம இப்ப சாப்பிட்டுட்டு இருக்குற இந்த முட்டாயோட சவ்வு காகிதத்துல இருக்காரு பாரு இவரு…” என்றபடியே தன் கையிலுள்ள காகிதத்தை சண்முகம் முகத்தருகில் கொண்டு சென்றான் அஜ்மல். அதில் முகேஷ் கண்ணா ‘சக்திமானாக’ நெடிதுயர்ந்து நின்றிருந்தார். “இவரு தான்டா சக்திமான், இவர் தான் நம்மள காப்பாத்துறாரு”.

ஒரு மஞ்சள் நிற நெகிழி காகிதத்தில் சில ‘பல்லி மிட்டாய்களையும்’ உதிரி பாகங்கள் கொண்ட ஒரு பொம்மையும் இருக்கும். அந்த மஞ்சள் நிற கவரில் சிவப்பு நிறத்தில் ‘சக்திமான்’ பிரிண்ட் செய்யப்பட்டிருப்பார். அதற்கு ‘சக்திமான் மிட்டாய்’ அல்லது ‘கிஃப்ட் பாக்ஸ்’ என்ற பெயர் சிறுவர்களுக்குள் பரிட்சயமானது.

சண்முகம் இரண்டு பல்லி மிட்டாய்களை வாயில் போட்டு சப்பிக் கொண்டே, “அஜ்ஜூ, அது சினிமா நாடகம் டா. சக்திமான்னு ஒன்னு நெசமா இல்லடா”

“ஆங்ங், நீதான் பாத்தியாக்கும்..? அவரு இருக்காருடா, இல்லைன்னு எந்த மரங்கழண்டவன் சொன்னான்..?” என சீறினான் அஜ்மல். சில்லென்ற தென்றல் அவர்கள் அமர்ந்திருக்கும் மரத்தைத் தீண்டிச் சென்றது. மரத்தின் இலைகள் பூரித்தது, அஜ்மலின் சீற்றத்தை தணிப்பது போன்று.

“டேய் அப்படிலாம் சொல்லாத. என் தாத்தா தான்டா சொன்னாரு, ‘சூப்பர் ஸ்டார்’ மாறி அவரும் நடிக்குறாருனு சொன்னாரு….”

“நடிக்குறதா?! இங்க பாருடா சேவலு இவன் சொல்றத” என்றபடி சேவலைப் பார்த்தான் அஜ்மல். முன்னர் வீசிய இளங்காற்றில் மரத்திலிருந்து ஒரு கூட்டுப்புழு கீழே விழுந்திருந்தது. அதை ஒரு குச்சியால் சீண்டிக் கொண்டிருந்தான் சேவல். அஜ்மல் கூறியது அவன் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. அதனால் அஜ்மல் சண்முகத்திடம், “என்னடா சக்திமானும் காப்பாத்துல சூப்பர் ஸ்டாரும் காப்பாத்துலனா யாரு தான்டா இந்த ஒலகத்த காப்பாத்துறாங்க..?” என்று கூச்சலிட்டான்.

“அதோ”, என்றபடியே ஏதோ ஒரு திசையில் வானத்தை நோக்கிச் சுட்டிக்காட்டி, “அங்க சாமி இருக்காருடா, அவருதான் நம்மள தீயசக்திகிட்ட இருந்து காப்பாத்துறாரு” என்றான் சண்முகம்.

சண்முகம் பட்டினத்துக்காரன். கோடை விடுமுறைக்குத் தன் தாத்தா ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்குத் தன் தாத்தா மேல் கொள்ளைப் பிரியம். தினமும் காலை எழுந்ததும் தன் பேரனைக் கூட்டிக்கொண்டு மாடிக்குப் போய் ‘சூரிய நமஸ்காரம்’ செய்வார். பின்னர் தன் பேரனைக் குளிக்க வைத்துவிட்டுத் தாமும் குளித்துவிடுவார். பின்னர் பூஜை அறைக்கு இட்டுச் செல்வார்.

அங்கே ஒரு செப்புக் கிண்ணத்தில் இருக்கும் திருநீற்றைக் கையில் ஒற்றி தேய்த்து தம் பேரனின் நெற்றியிலும் கழுத்திலும் தோள்பட்டைகளிலும் முழங்கையிலும் மார்பிலும் சகிதம் பூசிவிட்டு தாமும் பூசிக்கொள்வார். பழைய பூமாலைகளை கழற்றிவிட்டு தோட்டத்தில் பறித்த பூக்களாலான மாலையை காமதேனு முதற்கொண்டு பரமேஸ்வரன் வரை வீற்றிருக்கும் படங்களில் அணிவிப்பார். தேங்காய் ஒன்றை உடைத்து நீரைச் செப்புக் குவளை ஒன்றில் சேர்த்துக்கொள்வார். உடைத்த தேங்காயை அன்னபூரணி சிலைக்கு பக்கவாட்டுகளில் வைத்துவிட்டு ஊதுபத்திகளை ஏற்றிவைப்பார். சாம்பிராணியையும் பற்றவைத்துக்கொண்டு தேவாரப் பாடல்களும் திவ்வியப் பாசுரங்களையும் பாடுவார். அவருக்குப் பின்னே சண்முகமும் பாடுவான். பூஜை முடிந்தவுடன் ஏற்கனவே வார்க்கப்பட்ட தேங்காய் நீரைச் சிறு கரண்டியில் எடுத்து  சண்முகத்துக்குக் கொடுப்பார். இவ்வளவு நேரமும் அதற்காகவே காத்திருந்தது போல ஜாஜ்வல்யமாக கைகளைக் கூப்பி நீரை வாங்கிக் கொண்டு ‘சூர்ப்ப்..’ என்று உறிந்து கையைப் பின்னந்தலையில் தேய்த்துக்கொள்வான். ஒவ்வொரு பூஜைக்குப் பின் அன்னபூரணி சிலைக்கருகில் இருக்கும் தட்டில் சண்முகத்தின் தாத்தா  25 பைசாவோ 50 பைசாவோ இடுவார். அத்தட்டில் சில்லறைக் காசுகள் சிறு குன்று போல் இருக்கும்.

இவையெல்லாம் கணநேரத்தில் அவன் நினைவுக்கு வந்துசெல்ல, “பரமேஸ்வரன் தான்டா எல்லாத்துக்கும் உதவி பண்ணி காப்பாத்துறாரு” என்றான் சண்முகம்.

இவ்வளவு நேரம் புழுவைச் சீண்டிக்கொண்டிருந்தவன், “ஒலகத்தையும் நம்மளையும் காப்பாத்துறது பரமேஸ்வரனும் இல்ல சக்திமானும் இல்ல..” என்றான் சேவல். சேவலுக்கு மரங்கழண்டுவிட்டதோ என்று சந்தேகிக்கிறான் சண்முகம். அவ்விருவருக்கும் மரங்கழண்டுவிட்டதென தீர்க்கமானான் அஜ்மல்.

சேவல் மேலும், “அன்புன்னு ஒருத்தன் இருக்கான்டா அவனுக்கு எல்லாத்தையும் புடிக்குமாம். எல்லாத்துகூடையும் பிரெண்ட்ஷிப்பா இருப்பானாம். எல்லாத்துக்கும் ஒதவி பண்ணுவானாம். அதனாலேயே எல்லாரும் அவன் கூட சேருவாங்கலாம். அவன்கூட சேராதவங்க கூட யாரும் சேரமாட்டாங்கலாம்” என்று தன் தந்தை ஒருமுறை தன்னிடம் கூறியதைச் சேவல் கூறினான். மற்ற இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

“சரிங்கடா, எனக்குப் பசிக்குது நான் சாப்பிடப் போறேன்” என்று கூறி இலை ஒன்றில் அந்தக் கூட்டுப்புழுவை வைத்து அதைக் கையில் வைத்துக்கொண்டு எழுந்தான் சேவல்.

பின் அஜ்மலும், “சரி நானும் கெளம்புறேன். சாயங்காலம் சைக்கிள் ஓட்ட வந்துருங்கடா மறக்காம” என்றான். நண்பர்கள் கூட்டம் கலைந்தது.

சேவல் தன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தான். அவ்வப்போது நழுவிப்போன புழுவை இலையில் வைத்து கொண்டே சென்றான். உண்மையில் ‘சேவல்’ அவனது பெயரே கிடையாது; அவன் பெயர் சே குவாரா. அவன் தந்தை பொதுவுடைமைக் கொள்கைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். பேல் மூட்டை தூக்கி குடும்பம் நடத்துபவராய் இருப்பினும் எழுத்தறிவு கொஞ்சம் இருக்கிறது. ஓய்வு சமயங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு. சே குவாராவின் வாழ்க்கைப் பயணத்தை வாசித்து ஊக்கம் பெற்றதினால் தம் மகனுக்கும் அவர் பெயரையே வைத்துவிட்டார். அவனும் சமயங்களில் சேவல் போல் கழுத்தை நீட்டி கேலி செய்வதால் அவனை சேவல் என்றே அழைத்து வந்தார்கள் சிறுவர்கள். குழந்தைகள் நாவில் அப்பெயர் ஒட்டுவதென்பது சிறிது கடினம் தானே. ஆனால் அவனுக்கு அதுபற்றி இப்போது கவலை இல்லை. தினமும் அவன் தந்தை அவனிடம் 25 பைசாவை கொடுத்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வார். அதைச் சேர்த்து வைத்துதான் எதாவது செலவு செய்வான். ஆனால் இன்று ‘சக்திமான் மிட்டாய்’ வாங்கியதற்காக காசு முடிந்துவிட்டது. ‘இனி சைக்கிள் காசுக்கு யாரிடம் கேட்பது’ என்ற கவலை அவனுக்கு. இப்படி சிந்தித்தபடி தன் வீட்டையடைந்தான் சேவல்.

தன் கையிலிருந்த புழுவை வீட்டின் முன் வளர்ந்திருக்கும் மருதாணி செடியுடன் விட்டுவிட்டு உள்ளே சென்றான். சேவலின் தாய் பக்கத்தில் இருக்கும் நெசவு பட்டறையில் விசைத்தறி ஓட்டுபவள். அதிகபட்சம் வீட்டைப் பூட்டாமல் வெறும் தாழிட்டுக் கொண்டுதான் வேலைக்குச் செல்வாள். கதவைத் திறந்து நேரே சமையலறை சென்றான். அங்கு பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பார்த்தான். அவன் தாய்-தந்தைக்கு அன்று திருமண நாள். ஒரு வட்டியில் உணவை வார்த்துவிட்டு லயன் காமிக்ஸின் ‘ஸ்பைடர்’ காமிக்ஸை படித்துக்கொண்டே உணவை உண்டு முடித்தான். பின்னர் கதவைத் தாழிட்டு தன் அன்னை வேலை செய்யும் பட்டறைக்குப் போகலானான். பட்டறை நெருங்க நெருங்க ‘சடக் சடக்‘ என்று சத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. எனினும் ஒரு சுருதியோடு வந்தது.

“அம்மோவ், சாயங்காலம் சைக்கிளோட்ட போறேன். ஒரு 5 ரூபா தாங்க மா” என்று தன் உச்சஸ்தானத்தில் கத்தினான். அந்த அறையில் அவ்வளவு ஒலிகள் கலந்திருந்தன.

“ஏண்டா, உங்க அப்பா காசு குடுத்துப்புட்டு போனாரே, அத என்னடா பண்ண?”

“காலைல முட்டாய் வாங்க மூஞ்சிபோச்சு மா”

“என்டையும் காசில்ல கண்ணு, அம்மா இருந்த காசையும் சீட்டுக்கு குடுத்துட்டேன். அப்பா பொறைக்கு வந்தாதான் ஆச்சு” என்று முடிவை கூறிவிட்டு, “நாளைக்கி போய்க்கலாம் சாமி, இன்னிக்கு வேற எதாச்சும் வெளாண்டுட்டு இரு, என்ன..” என்றாள் அவன் அம்மா.

இதுக்கு மேல ஒன்றும் செய்வதற்கில்லை என்று எண்ணிக் கொண்டு இரைச்சலாய்த் தோன்றிய சப்தங்களிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு வெளியில் வந்தான். நேரே அஜ்மலின் வீட்டிற்கு நடைபோட்டான். அவனுக்கு முன்பே சண்முகம் அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தான். அஜ்மல் வீட்டில் எப்போதும் இந்நேரம் தொழுது கொண்டிருப்பார்கள். சேவலுக்கு அதைக் காணும் வாய்ப்பு ஏற்கனவே கிடைத்திருந்தது.

“அவன மாறி பண்ணோனும்னு எனக்கு ஆசைடா சம்முகா, ‘என்றபடியே சண்முகத்தோடு சேர்ந்துகொண்டான். சிறிது நேரம் கழித்து அஜ்மலும் வந்து சேர்ந்தான்.

“சரிங்கடா போலாமா?” என்றான் அஜ்மல்.

சேவல், “வேற எதாச்சும் வெளாடுவோம், என்ன சொல்ற?” எனக் கேட்டான்.

“நான்தா காலைலேயே சொன்னேல டா, எப்ப பாத்தாலும் நீ இப்படிதான் பண்ற” எனக் கொஞ்சம் கோவித்துக்கொண்டான்.

“இல்லடா, அப்பா குடுத்த காசு காலில செலவாயிருச்சு டா, அதான்” என்றபடி இழுத்தான் சேவல்.

வாடகை சைக்கிள் அப்போது மிகவும் பிரபலம். வகைவகையாக சிறுவர் சைக்கிள்கள் இருக்கும். அரைமணி நேரத்திற்கு 5 ரூபாயும் 1 மணி நேரத்திற்கு 10 ரூபாயும் வசூல் செய்வார்கள். எல்லோரும் அவ்வாய்ப்பினால் குரங்கு பெடல் முதல் ‘வீலிங்‘ வரை அசத்திக் கொண்டிருப்பார்கள். எத்தனை பேர் பயன்படுத்தினாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சைக்கிள் பிடிக்கும். நம் சிறுவர்கள் இருக்கும் தெருவிற்கு கீழே தான் ‘முஸ்தப்பா அண்ணன் சைக்கிள் கடை’

சண்முகம், “டேய் நீங்க போயிகிட்டு இருங்க, நான் வந்துடுறேன்” என்று வீட்டை நோக்கி ஓடினான்.

ஒரு கால்மணி நேரம் கழித்து சண்முகம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து சேர்ந்தான்.

“சேவலு, இப்ப சைக்கிள் ஓட்டலாமா” என்றபடி தன் வலக்கையை விரித்தான் சண்முகம்.

“யார் கிட்ட இருந்துடா வாங்கிட்டு வந்த?” என்று வினவினான் சேவல்.

சண்முகம் நேரே தன் தாத்தா வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து மண்டியிட்டான். கைகளை கூப்பி மூச்சு வாங்க,

“இங்க பாருங்க… என் பிரெண்டு… சைக்கிள் ஓட்ட காசு எடுத்துக்குறேன்… தப்பா நெனச்சுக்காதிங்க… யார்கிட்டேயும் சொல்லிராதிங்க” என மனத்தில் வேண்டிக்கொண்டு, இருந்த காசை கையில் பிடிக்குமளவு அள்ளிக் கொண்டு, வேகமாக ஓடிவந்து சைக்கிள் கடைக்கு வந்தடைந்தான்.

“அதெல்லாம் ரகசியம் டா. யார்டேயும் சொல்லமாட்டேன்னு அம்மா மேல சத்தியம் பண்ணியிருக்கேன். நீ சைக்கிள் ஓட்ட வரியா இல்லியா?” என்று கேட்டுக்கொண்டே அவரவர்களுக்குப் பிடித்த சைக்கிளை எடுத்துக்கொண்டார்கள்.

~srinivas

One thought on “சாமி & கோ

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d