நான் ஏன் இறந்தேன் – Crime Novel

பேசியபடி வரதட்சணை பணத்தைக் கொடுக்கத் தாமதமானதால் பைரவியை மணவறைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் மாப்பிள்ளை சசியின் அப்பா சிகாமணி. பைரவியின் அப்பா ராமலிங்கம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லாமல் போகிறது. ஒருவழியாக ராமலிங்கம் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர, திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் பைரவி.

பைரவியின் மறுப்பை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் மணமேடையில் நின்று போன கல்யாணம் நடந்ததாக சரித்திரம் இல்லை என்று கோபத்தில் அவளைக் கறுவிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அதே நேரத்தில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞன் வருகிறான். தன்னுடைய பெயரை நந்தகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவன் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் கூறிவிட்டு பைரவியைத் திருமணம் செய்துகொள்ள முன்வருகிறான்.

நந்தகுமாரின் திடீர் திருமணத்தை விரும்பாத அவனுடைய பெற்றோரும் அவனுடைய தங்கையும் பைரவியை வெறுக்கின்றனர். ஆனால் நந்தகுமார் பைரவியை நன்றாகப் பார்த்துக்கொள்கிறான். இந்நிலையில் தன்னை எதிர்த்து பைரவி வேறொருவனைத் திருமணம் செய்துகொண்டதை விரும்பாத சசியும் அவனுடைய அப்பா சிகாமணியும் அவளைப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டுகின்றனர்.

திருமணம் முடிந்து சில மாதங்களில் பைரவி கர்ப்பம் தரிக்க, அவளைக் கூட்டிக்கொண்டு குலதெய்வம் கோவிலுக்குச் செல்கிறான் நந்தகுமார். அங்கு திடீரென்று வந்த மர்ம நபர் ஒருவன் நந்தகுமாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டுத் தப்பிச் செல்கிறான். சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறான் நந்தகுமார்.

ஏற்கனவே பைரவியைப் பிடிக்காத நந்தகுமாரின் குடும்பத்தினர் அவனுடைய சாவைக் காரணம் காட்டி அவளுடைய பிறந்த வீட்டிற்கு அவளை அனுப்ப முடிவு செய்கின்றனர். தன்னுடைய வீட்டிற்குச் செல்ல மறுத்த பைரவியை நந்தகுமாரின் அம்மாவும் தங்கையும் பிடித்து வெளியே தள்ள, அப்போதே அவளுடைய கர்ப்பம் கலைகிறது. நிலைமை இவ்வாறிருக்க ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்த நந்தகுமாரின் அம்மா மாடியில் ஏதோ சத்தம் கேட்டு இருட்டில் செல்கிறாள்.அங்கே நந்தகுமார் வாயில் ரத்தக்கறையுடன் நின்றுகொண்டிருக்கிறான்.

மிரண்டுபோன அவள் தன்னுடைய கணவனை எழுப்பி விபரத்தைச் சொல்ல அங்கு சென்று பார்த்தபோது யாரும் இல்லாததால் அதை நம்ப மறுக்கிறார் அவர். அதே போன்று விடியற்காலையில் தண்ணி பிடிப்பதற்காக பைப் அருகே சென்ற பைரவியின் அம்மாவும் வாயில் ரத்தக்கறையுடன் நந்தகுமாரைப் பார்த்து திகைக்கிறாள்.

நந்தகுமாரின் மரணத்திற்கு யார் காரணம்..? கொலைக்கான நோக்கம் என்ன..? இறந்துபோன நந்தகுமாரின் ஆவி சொல்ல வருவது என்ன..? கணவனை இழந்த பைரவியின் நிலை என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #naan_yen_irandhen

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=354

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d